சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்!
நாகர்கோவில்: ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று துவங்கியது. வரும் ஏப்., ?ம் தேதி நடைபெறும் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்குகிறது. இதன் அடையாளமாக, கடந்த குருத்தோலை ஞாயிறு நாளில் வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, அதில் கிடைத்த சாம்பல் மூலம், நெற்றியில் சிலுவை வரையும் நிகழ்ச்சி, கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நடந்தது. இந்த நாட்களில், பூக்கள் சூடுவதையும், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதையும் கிறிஸ்தவர்கள் தவிர்க்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில், மறை மாவட்ட பிஷப் பீட்டர் ரெம்ஜியூஸ், சாம்பலால் சிலுவை வரைந்தார். தொடர்ந்து, தவக்கால திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன், அவர், கொடுமைகள் அனுபவித்ததன் அடையாளமாக, இந்த சாம்பல் புதன் நிகழ்ச்சியும், தவக்காலமும் அனுஷ்டிக்கப்படுகின்றன.