வெங்கட்ரமண பெருமாள் கோவில் லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை!
மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. மோகனூர், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா நடக்கிறது. மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றியடையவும், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், பருவமழை காலத்தே பெய்து, நதி நீர் வளம் பெற்று விவசாயம் செழித்து வளரவும், உலக நன்மைக்காகவும், இந்த லட்சார்ச்சனை பெருவிழா நடத்தப்படுகிறது.இந்தாண்டு விழா, நேற்று துவங்கியது. நேற்று காலை, 6 மணிக்கு, விஸ்வக்ஷேனா பூஜை, புண்யாக வாசனம், பகவத் பிரார்த்தனை, ஹயக்ரீவர் திருமஞ்சனம், சங்கல்பம், லட்சார்ச்சனை நடந்தது. இன்று (பிப். 19) காலை, 7 மணிக்கு அபிஷேகம், லட்சார்ச்னை நடக்கிறது.அதை தொடர்ந்து பிப்ரவரி, 20, 21ம் தேதி சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் லட்சார்ச்சனை நடக்கிறது. 22ம் தேதி காலை, 7 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு ஹயக்ரீவர் உற்சவ மூர்த்தி கோவில் வளாகத்தில் திருச்சுற்று வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தொடந்து புஷ்பாஞ்சலி, கூட்டுப்பிரார்த்தனை, தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.