உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூச்சியூரில் சிவராத்திரி விழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு

பூச்சியூரில் சிவராத்திரி விழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, பூச்சியூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி, வீரபத்திரசாமி கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவராத்திரியையொட்டி குருடிமலையில் இருந்து தீர்த்தகலசம் எடுத்து வருதல், அபிசேஷ ஆராதணை நிகழ்ச்சிகள் நடக்கும்.நேற்று காலை கோவில் அருகே உள்ள மைதானத்தில் மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் பூசாரி தலையில், தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியுடன், விழா துவங்கியது. தொடர்ந்து, மகாலட்சுமி பரிவாரங்களுடன் மைதானத்தில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தார்.

தொடர்ந்து, வேட்டைக்காரசாமி பரிவார மூர்த்திகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தார். இதில், கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்பு அணிந்து, தரையின் மீதுள்ள விரிப்பு மீது நடந்து வந்தார். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, வீரபத்திரசாமி, தனது பரிவார மூர்த்திகளுடன் ஊர்வலமாக வந்தார். விழாவையொட்டி, சுவாமி வரும் பாதையில் ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, அந்தந்த கோவில் கமிட்டினர் செய்து இருந்தனர்.

போலீசார் கண்காணிப்பு : பூச்சியூரில் உள்ள வேட்டைக்காரசாமி கோவில் ஊர்வலத்தின் போது, கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்புடன் கோவில் அருகே உள்ள கான்கிரீட் சாலை மீது நடந்து வருவார். அப்போது, பூசாரி வரும் வழியில், பெண்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தரையில் படுத்துக்கொள்வர். அவர்கள் மீது பூசாரி ஆணிக்கால் செருப்புடன் நடந்தால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.ஆனால், இச்சடங்குக்கு பல்வேறு பெண்கள் நல உரிமைச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன; இச்சடங்குக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் கொடுத்தன. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கோவில் நிர்வாகிகளிடம் இச்சடங்குகளை நடத்த மாட்டோம் என எழுதி வாங்கி கொண்டனர். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !