உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 6 ஆண்டுக்கு பின் மாசானக்கொள்ளை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

6 ஆண்டுக்கு பின் மாசானக்கொள்ளை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ராசிபுரம்: அங்காளபரமேஸ்வரி கோவிலில், ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மாசானக்கொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன், பெரியாண்டிச்சி மற்றும் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசி சிவராத்திரையை முன்னிட்டு, "மாசானக் கொள்ளை நடத்தப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு விழா, கடந்த, 8ம் தேதி துவங்கியது. அன்று, உற்வச மூர்த்திகள் சிவன் கோவிலில் இருந்து அழைத்து வருதல், சிறப்பு அபிஷேகம், கொடியேற்றுதல், அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.அதை தொடர்ந்து, 16ம் தேதி வரை, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு, 7 மணிக்கு, ரிஷிபம், யானை, கிளி, புலி, அன்னம், காமதேனு, குதிரை, மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும், அம்மன் அழைத்தல், குண்டம் பற்ற வைத்தல், பூவாங்குதல், முகமட்டு கப்பரை எடுத்தல், அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. அதையடுத்து, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.நேற்று "மாசானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து, சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை, ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி அருகில் உள்ள மயானத்திற்கு, மாலை, 6 மணிக்கு சென்றனர். அங்கு பூசாரியால் சேமித்து வைக்கப்பட்டிருந்த, மண் உருவ சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்களால் அம்மனுக்கு படைக்கக்கப்பட்ட சாதத்தை, பூசாரி சாப்பிட்டார். அதைதொடர்ந்து, பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆடு, கோழிகளை, பூசாரி உயிருடன் கடித்து ரத்தத்தை குடித்து, மண் உருவத்திற்கு பலி கொடுத்தார். பின்னர், ஊர்வலமாக திரும்பி, ராசிபுரம் செல்லியம்மன் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, காளி வேடம் அணிந்த பூசாரி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு பின், இந்த மாசானக் கொள்ளை நடந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !