உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலை ரசிப்பதில் சிக்கல்: தடையை ஏற்படுத்தும் மின் கட்டணம்!

கைலாசநாதர் கோவிலை ரசிப்பதில் சிக்கல்: தடையை ஏற்படுத்தும் மின் கட்டணம்!

காஞ்சிபுரம்: மின் கட்டணத்தை காரணம் காட்டி, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் மின்விளக்குகள், இரவு வேளைகளில் ஒளிருவதில்லை. இதனால், மின் ஒளியில் கோவிலின் அழகை, சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

பாரம்பரிய சின்னம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், கி.பி.,7ம் நூற்றாண்டில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த ராஜசிம்மன் என்ற அரசனால் கட்டப்பட்டது. இதன் கலை சிறப்பால், பழம்பெரும் உலக பாரம்பரிய சின்னமாக, இந்த கோவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல்லவர்களின் கட்டுமான கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கோவிலை காண, நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஆயிரக்கணக்கான அண்டை மாநிலவாசிகளும் வந்து செல்கின்றனர். அந்தி நேரத்திலும், இரவிலும் கோவில் கலை அழகை ரசிப்பதற்கு வசதியாக, பசுமையுடன் கூடிய புல்வெளியுடன் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

மின் விளக்குகள்:
இந்நிலையில், கோவிலை சுற்றியுள்ள மின் விளக்குகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், இரவு நேரங்களில் எரிகின்றன; மற்ற ஐந்து நாட்களிலும், அனைத்து விளக்குகளும் அணைத்து வைக்கப்படுகின்றன. இதனால், இரவு வேளைகளில் கோவில் அழகை சுற்றுலாப் பயணிகளால் ரசிக்க முடியவில்லை. இதுகுறித்து, கைலாசநாதர் கோவிலின் தொல்லியல் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ஏற்கனவே, கோவில் வளாகத்தில் உள்ள புல் தரைக்கு தண்ணீர் பாய்ச்சுவதால் மின் கட்டணம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், இரவு முழுவதும் மின் விளக்குகள் எரிந்தால், அதிக மின்கட்டணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அதிக மின் கட்டணம் வந்தால், தொல்லியல் துறையின் உயரதிகாரிகளுக்கு நாங்கள் பதில் சொல்ல நேரிடும், என்றார்.

சுற்றுலா பயணிகள்:
கோவில் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள், இரவு வேளையின் ரம்யத்தை உணராமலேயே திரும்புகின்றனர். எனவே, வாரத்தின் அனைத்து நாட்களிலும், கோவிலைச் சுற்றியுள்ள மின்விளக்குகள் எரிய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !