பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக விழா
குறிச்சி : குனியமுத்துார் அருகேயுள்ள, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையினை ஒட்டி, குனியமுத்துார் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள கோவிலின் விழா துவக்கமாக, நேற்று முன்தினம், வினாயகர் பூஜை, புண்யாஹவாஜனம், பஞ்சகவ்யம், கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி முதலிய பூர்வாங்க பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, முளைப்பாலிகை ஊர்வலம், தீர்த்தம் எடுத்து வருதலும் நடந்தன.இதையடுத்து, ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும் நடந்தன. நேற்று காலை, ௫:௩௦ மணிக்கு, வினாயகர் பூஜை, புண்யாஹவாஜனம், பஞ்சகவ்யம், இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹுதி, திரவ்யாஹுதி, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடும் நடந்தன.காலை, ௯:௩௦ மணிக்கு, பாலதண்டாயுதபாணி சுவாமி விமானம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திக்கு கும்பாபிஷேகம், பள்ளபாளையம், கனகசபாபதி பண்டிதர், சரவண சிவாச்சார்யார் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, மகாபிஷேகம், தச தானம், தச தரிசனம், மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதலும் நடந்தன. இதையடுத்து, அன்னதானம் நடந்தது.நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி, சூலுார், காரைக்கால் அருட்பணி மன்ற சிவக்குமார சுவாமி, ஸ்தல சிவாச்சார்யார் சிவகோபிநாதன், அன்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.