ஸ்ரீனிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்க உள்ள மாசிமக தீர்த்தவாரியில், திண்டிவனம் ஸ்ரீனிவாச பெருமாள், 6ம் ஆண்டாக எழுந்தருளுகிறார். புதுச்சேரி அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாள் மாசிமக கடல் தீர்த்தவாரி கமிட்டியின் கவுரவத் தலைவர் பொன்னுரங்கம் கூறியதாவது: வைத்திக்குப்பம் கடற்கரையில், 5ம் தேதியன்று நடக்கும் மாசிமக தீர்த்தவாரியில், திண்டிவனம், நல்லியக்கோடன் நகர், அலர்மேல் மங்கை தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீனிவாச பெருமாளுக்கு, சிருங்கேரி மடம் ஸ்ரீசாரதாம்பாள் கோவிலில் நாளை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டு, வைசியாள் வீதியில் உள்ள வாசவி திருமண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். 5ம் தேதியன்று காலை 6:30 மணிக்கு, வைத்திக்குப்பம் தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை 3:00 மணிக்கு மீண்டும் வாசவி மண்டபம் வந்தடைந்து, மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 6ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் முடிந்து, மாலை 6:00 மணிக்கு, சுவாமி ஆஸ்தானம் புறப்பாடாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.