ஸ்தலசயன பெருமாள் கோவிலில்நாளை தெப்ப உற்சவம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நாளை (மார்ச் 4ம் தேதி) இரவு, தெப்ப உற்சவம் மற்றும் நாளை மறுநாள் காலை, மாசி மக தீர்த்தவாரி நடைபெற உள்ளது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மாசி மக பவுர்ணமி தெப்ப உற்சவம், நாளை இரவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு, சுவாமிக்கு சாற்றுமறையுடன் சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடைபெறும்.இரவு, 7:30 மணிக்கு, சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன், புண்டரீக புஷ்கரணி திருக்குளம் சென்று, குளத்தில், அலங்கார தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தும், அதைத் தொடர்ந்து வீதியுலாவும் செல்கிறார். நாளை மறுநாள் காலை, 6:00 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி, கோவிலிலிருந்து புறப்பட்டு கடற்கரை சென்று, சுவாமியின் அம்சமான சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனமும், காலை 8:00 மணிக்கு, கடலில் தீர்த்தவாரியும் நடைபெறும். இங்குள்ள ஆதிவராகப்பெருமாளும், கடலில் புனித நீராடுவார். கல்பாக்கம் நகரியம், வெங்கடகிருஷ்ண பெருமாள்; ஸ்ரீனிவாச பெருமாள்; ராமர்; சாய்பாபா; சதுரங்கப்பட்டினம், வரதராஜபெருமாள்; மெய்யூர், ஆதிகேசவ பெருமாள்; ஆயப்பாக்கம், ஓரக்கண்ணி மாரியம்மன்; விட்டிலாபுரம், பிரேமிக விட்டலர் (பாண்டுரங்கர்).மேல்பெருமாள்சேரி, பக்த ஆஞ்சநேயர்; சூராடிமங்கலம், லட்சுமி நாராயண பெருமாள்; சிட்டிலம்பாக்கம், செங்கேணியம்மன் ஆகிய சுவாமிகள், நாளை மறுநாள் காலை, 7:00 மணிக்கு, சதுரங்கப்பட்டினம் மீனவ கடற்கரை பகுதிக்கு செல்ல, அப்பகுதி ஊத்துகாட்டம்மன், பெரியபாளையத்தம்மன், சியாமளாதேவி அம்மன், செல்லியம்மன் ஆகியோர் அவர்களை வரவேற்று, சிறப்பு திருமஞ்சனத்திற்கு பின், காலை 9:00 மணிக்கு, சக்கரத்தாழ்வார், கடலில் புனித நீராடுகிறார்.