கும்பகோணம் கோவில்களில் இளைய மகாமக தேரோட்டம்!
கும்பகோணம் : இளைய மகாமகத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில், நேற்று, மூன்று கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா நடைபெறுகிறது. மகாமகத்திற்கு ஓராண்டுக்கு முன் வரும் மாசிமகம், இளைய மகாமகம் என அழைக்கப்படுகிறது. இந்த இளைய மகாமகம், இன்று கும்பகோணத்தில் கொண்டாடப்படுகிறது.இதற்காக கடந்த மாதம், 23ம் தேதி ஆதிகும்பேஸ்வரன் கோவில், வியாழசோமேஸ்வரன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த, 1ம் தேதி காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.கடந்த மாதம், 24ம் தேதி, ஆதிவராக பெருமாள் கோவிலில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.
நேற்று காலை, ஆதி கும்பேஸ்வரன் கோவிலில், ஆதி கும்பேஸ்வர ஸ்வாமி மற்றும் மங்காளம்பிகை தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதையடுத்து, நூற்றுகணக்கான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.நேற்று மாலை, மகாமக குளக்கரையில் காசி விஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, காசி விஸ்வநாதர் விசாலாட்சி, அபிமுகேஸ்வரர் அமிர்தவல்லி அம்பாள் தேரில் எழுந்தருளினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர்.