ஹோலி பண்டிகை: திருப்பூரில் உற்சாகம்!
திருப்பூர்: திருப்பூரில் உள்ள வட மாநிலத்தவர்கள், ஹோலி பண்டிகையை நேற்று உற்சாகமாக கொண்டாடினர்; வண்ணப்பொடிகளை தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வட மாநில மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று; நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தொழில் நகரான திருப்பூரில் பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், ம.பி., ராஜஸ்தான், உ.பி., போன்ற மாநிலங்களில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.ஹோலி பண்டிகையை, திருப்பூரில் உள்ள வட மாநிலத்தவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். ஸ்டேட் பாங்க் காலனி, ராயபுரம், சித்தப்பா கார்டன் பகுதியில் வாழும் வடமாநிலத்தவர்கள், வீடுகளை அலங்கரித்து, இறைவனை வணங்கி, அக்கம் பக்கத்தினருக்கு இனிப்பு வழங்கியும், வண்ணப்பொடிகள் கலந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும், மகிழ்ந்தனர்.ராம்நகர், எம்.எஸ்., நகர், கொங்கு மெயின் ரோடு, காதர்பேட்டை பகுதிகளில், ரோட்டில் திரண்ட இளைஞர்கள், சாயப்பொடியை தூவிக்கொண்டு, மேளதாளத்துடன் நடனமாடினர். இதேபோல், அரிசிக்கடை வீதி, ஜம்முதாவி முதல் வீதி, யூனியன் மில் ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், புஷ்பா நகர், ஆலங்காடு என வடமாநிலத்தவர் அதிகம் வாழும் பகுதியில், ஹோலி கொண்டாட்டம் களைகட்டி இருந்தது.