ராஜகோபால சுவாமி.. புதிய தாயார் சன்னதிக்கு வாசல்கால் வைப்பு!
விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவிலில், புதியதாக கட்டப்படும் தாயார் சன்னதிக்கு, வாசல்கால் பொருத்தப்பட்டது. விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி, தாயாருக்கு (செங்கமலத் தாயார்) தனி சன்னதி இல்லை. அதைத் தொடர்ந்து, புதிய சன்னதி மற்றும் கண்ணாடி மாளிகை கட்ட தீர்மானிக்கப்பட்டது. திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் சுவாமிகள், சி த்தரக்கூடம் டாக்டர் ரங்காச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், பூமி பூஜை செய்யப்பட்டது. மகாபலிபுரத்திலிருந்து கடந்த மாதம், புதிதாக கொண்டு வரப்பட்ட தாயார் சிலை, தானியத்தில் (நெல்) வைக்கப்பட்டு, 48 நாள் பூஜை நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து, புதிய தாயார் சன்னதிக்கு வாசல்கால் பொருத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10:00க்கு மேல் 11:00 மணிக்குள் வாஸ்து பூஜை, நாலாயிர திவ்யபிரபந்தம், சேவாகாலம் படித்து, வாசல்கால் பொருத்தப் பட்டது.