சின்ன ஓங்காளியம்மன் கோவில் ஸ்வாமிக்கு தயிர் சாதம் படைத்தல்!
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில், மாசி குண்டம் திருவிழா மஞ்சள் நீராட்டு மற்றும் தயிர்சாதம் படைத்தல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றதையடுத்து, சுற்று வட்டார மக்கள், பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். திருச்செங்கோடு சின்ன ஒங்காளியம்மன் கோவில் மாசிக்குண்டம் திருவிழா பூச்சாட்டுதல், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி, தீர்த்த ஊர்வலம், அம்மன் சக்தி அழைத்தல் மற்றும் அக்னி கரகம், 108 சங்கு அபிஷேகம், பூச்செரிதல் விழா, குண்டத்து பூஜை, மகா குண்டம் ஆகிய விழாக்கள், கடந்த சில நாட்களாக நடந்தது. மேலும், ஸ்வாமி நான்கு ரத வீதிகளில், வாண வேடிக்கையுடன் திருவீதி உலா, சிறப்பு அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டு, ஸ்வாமிக்கு தயிர் சாதம் படைத்தல் ஆகிய நிகழ்ச்சியுடன், நேற்று விழா நிறைவு பெற்றது. அதையடுத்து, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், ஸ்வாமிக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.