காரிய சித்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ஆர்.கே.பேட்டை: பார்வதி தேவி உடனுறை காரிய சித்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில், பார்வதி தேவி உடனுறை காரிய சித்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை, கோவில் கோபுரம் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் துவங்கியது, நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகாபூர்ணஹூதியும் நடத்தப்பட்டன. தொடர்ந்து, காலை 9:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து, புனிதநீர் கலசங்கள் கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவர் காரிய சித்தீஸ்வரர், பார்வதி மற்றும் விநாயகர், சுப்ரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணி அளவில், உற்சவர் வீதியுலா எழுந்தருளினார். விழாவில், பாலாபுரம், ஆர்.ஜே.மோட்டூர், எஸ்.கே.வி. கண்டிகை, மகன்காளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.