நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
நத்தம்;நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழவை முன்னிட்டு நேற்று"பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் "பூக்குழி திருவிழா தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலம். இந்தாண்டு பிப்., 23 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து கம்பம் நகர் வலம் வருதல், கேடயம், சிம்மம், அன்னம் ஆகிய வாகனங்களில் அம்மன் பவனி வருதல், மாவிளக்கு எடுத்தல், பால், சந்தன குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேக நிழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அக்னிச் சட்டி, அலகு குத்துதல், அங்கப்பிரதட்சணம், கரும்பு தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக் கடன்கள் செலுத்தினர்.
பகலில் காந்திநகர் பொதுமக்கள் வழுக்குமரம் ஊன்றினர், காமராஜர் நகர் பொதுமக்கள் அதில் ஏறினர். பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலவகை மரக்கட்டைகளை கொண்டு கோயில் முன் ஏற்படுத்திய பூக்குழியில் பூசாரிகள் இறங்கினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இறங்கினர். இரவு கம்பம் கொண்டு போய் அம்மன் குளம் சேர்க்கப்பட்டது. இன்று இரவு "பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பூசாரிகள் சொக்கையாநாயுடு, கிருஷ்ணமூர்ணத்தி, சுரேஷ், சின்னராஜ், நடராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.