பரமக்குடி முத்தாலம்மனுக்குமார்ச் 20ல் பூச்சொரிதல் விழா!
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி மார்ச் 20 ம் தேதி பூச்சொரிதல் விழா நடக்கிறது. மார்ச் 27 ல், கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இதையொட்டி தினமும் அம்மன் பூதகி, வெள்ளி சிங்க, அன்ன, ரிஷப, யானை, கிளி, காமதேனு, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச் 30 ல், மாலை 5 மணிக்கு வண்டிமாகாளி வேஷத்துடன் பக்தர்கள் மாடுகள் பூட்டிய வண்டியில் ஆடி வருவார்கள். ஏப்., 4ல், சந்திரகிரணத்தையொட்டி, காலை நடை சாற்றப்பட்டு, இரவு 7.45 மணிக்கு திறக்கப்படும்.
பின்னர் இரவு 10 மணிக்கு மேல் மின்சாரதீப ரதத்தில் அம்மன் நான்கு ரத வீதிகளில் சுற்றி வருவார். அன்று இரவு 3 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் கள்ளர் திருக்கோலத்துன் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மறுநாள் அக்னிச்சட்டியும், ஏப்., 6 ல், காலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க்கவுள்ள பால்குட ஊர்வலத்துடன், சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது. இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் சயன கோலத்தில் வீதியுலாவுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.