பெருமாள் கோயிலில் ஆண்டாள் சன்னதி கட்டும் பணி துவக்கம்!
உத்தமபாளையம்:உத்தமபாளையம் யோக நரசிங்கபெருமாள் கோயிலில் ஆண்டாள் சன்னதி கட்டும் பணிகள் துவங்கியது. உத்தமபாளையம் நகரின் மையப்பகுதியில் யோக நரசிங்க பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 600 ஆண்டு பழமைவாய்ந்த இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்ய ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் முடிவு செய்தனர். ராஜகோபுரம் மற்றும் மண்டபம் கம்பம் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் சார்பிலும், ஆண்டாள் சன்னதி பழனிவேல், கொடி மரம் கர்ணம் வீட்டார் சார்பிலும் கட்டித் தரப்படுகிறது.தற்போது ஆண்டாள் சன்னதி கட்டும் பணிகள் துவங்கியுள்ளது.
கோயிலின் வடக்கு பக்கத்தில் புதிதாக ஆண்டாள் சன்னதி அமைக்கப்படுகிறது. இதற்கென உடையாத கடின தன்மை கொண்ட கருங்கற்கள் நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த கற்கள் மட்டும் பல லட்ச ரூபாய்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டாள் சன்னதி கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. உபயதாரர் தனலட்சுமி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பழனிவேல் கூறியதாவது: கோயிலில் ஆண்டாள் சன்னதி புதிதாக கட்டப்படுகிறது. யோக நரசிங்க பெருமாளுக்கு வடக்கு பக்கம் ஆண்டாள் சன்னதி அமைத்தால், ஊருக்கு சுபிட்சம் உண்டாகும் என சாஸ்திரங்கள் கூறுவதால் இந்த பணியை மேற்கொண்டுள்ளேன், என்றார்.