தேர்த்திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம்: தீவிர பாதுகாப்பு!
பொள்ளாச்சி: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, இன்று முதல் 13ம் தேதி வரை போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வெள்ளி தேரோட்ட விழா, இன்று துவங்கி வரும் 13ம் தேதி வரை நடக்கும். இந்நிகழ்ச்சியையொட்டி, பொள்ளாச்சி நகரில் தேர் செல்லும் முக்கிய பாதைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.பி., சுதாகர் மற்றும் டி.எஸ்.பி., மீனாட்சி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, போலீசாருக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இதில், கோவில் வளாகத்திலிருந்து மார்க்கெட் ரோடு வழியாக வெங்கட்ரமணன் ரோட்டில் முதல் நாள் தேர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோட்டூர் ரோட்டில் வரும் வாகனங்கள், கோட்டூர் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள புதிய திட்ட சாலை வழியாக மரப்பேட்டை பார்க் ரோடு, உடுமலை ரோடு வழியாக சென்று பஸ்ஸ்டாண்டை அடையும். இதுபோன்று திருவள்ளுவர் திடல் வழியாக வரும் வாகனங்கள், கால்நடை மருத்துவமனை ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு திருப்பி விடப்படும். இரண்டாம் நாள் (12ம் தேதி) தேரோட்டமானது, வெங்கட்ரமணன் ரோட்டிலிருந்து சத்திரம் வீதிக்கு சென்றடைகிறது. அதனால், சப்-கோர்ட்டிலிருந்து உடுமலை ரோடு தேர் நிலையம் வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. உடுமலை ரோட்டிற்கு வரும் வாகனங்கள், சப்-கோர்ட் அருகிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறது. கடைவீதி மற்றும் கோவை ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது. சத்திரம் வீதியிலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மரப்பேட்டை பார்க் ரோடு வழியாக தேர்நிலையத்திற்கு திருப்பி விடப்படுகிறது. உடுமலை ரோட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரும் வாகனங்கள் பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு வழியாக செல்ல வேண்டும். வரும் 13ம் தேதி, சத்திரம் வீதியிலிருந்து மார்க்கெட் ரோடு வழியாக தேரோட்டம் நடக்கிறது.
அதனால், சத்திரம் வீதியில் இருபக்கமும், மார்க்கெட் ரோட்டிலும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. சத்திரம் வீதிக்கு, மாற்றாக மரப்பேட்டை பார்க் ரோட்டை பயன்படுத்த வேண்டும். இந்த தற்காலிக மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளித்து போக்குவரத்து பாதிக்காமல் இருக்க வேண்டும். என போலீசார் தெரிவித்தனர்.