உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நேற்று துவங்கியது தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மதியம், வெள்ளித்தேரில் அம்மனும், மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வெள்ளித்தேரோட்டம் இரவு, 8:45 மணிக்கு மேல், கோவிலில் இருந்து தொடங்கியது. அப்போது, உற்சவ நாயகியாக, 22 அடி உயரமுள்ள பிரமாண்ட வெள்ளித்தேரில் எழுந்தருளிய அம்மன், பொள்ளாச்சி நகரில் திருவீதி உலா சென்றார். விநாயகர் தேர் உடன் சென்றது. இதில், கோவில் நிர்வாகத்தினர், ஊர் பிரமுகர்கள், திரளான பக்தர்கள், தேர் வடம் பிடித்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், பக்தர்கள் பலரும் வழிபட்டுச் செல்லும் வகையில், வெங்கட்டரமணன் வீதியில், நிலை கொண்டது. இன்று (12ம் தேதி) மாலை வரை, தேர் அங்கு நிற்கும். பிறகு உடுமலை ரோடு தேர்நிலையில் நிறுத்தப்படும். மூன்று நாள் தேர் திருவிழா, நாளை மாலை, 7:00 மணிக்கு, தேர்நிலையில் இருந்து கோவிலுக்கு, தேர் திரும்பி செல்வதுடன் நிறைவடையும். தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் விழா உள்ளிட்ட வைபவங்கள், நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !