உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சைலகிரீஸ்வரர் கோவில் விவகாரம்: கும்பாபிஷேக குழு கோர்ட்டில் வழக்கு!

சேலம் சைலகிரீஸ்வரர் கோவில் விவகாரம்: கும்பாபிஷேக குழு கோர்ட்டில் வழக்கு!

சேலம்: சேலம், திருமலைகிரி சைலகிரீஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் போக்கால், கோவிலை இழுத்து மூடி, சீல் வைக்கப்பட்டது. அதனால், கடந்த, 4ம் தேதி நடக்கவிருந்த கோவில் கும்பாபிஷேகமும் தடைபட்டது. இச்சம்பவத்தால், கோவிலுக்கு பாத்தியப்பட்ட, 21 கிராமங்களில், இன்னமும், அமைதியின்மை நிலவி வருகிறது. கடந்த, 9ம் தேதி மாலையுடன், முடிவுக்கு வந்த தடை உத்தரவால், அடுத்தகட்டமாக, சேலம் ஆர்.டி.ஓ., ஷேக்முகைதீன் தலைமையில், பேச்சுவார்த்தை நடந்தது.இந்த பேச்சுவார்த்தையும், தோல்வியில் முடிந்தது. எனவே, நிலைமையை சமாளிக்க, வேறுவழியின்றி, 144 தடை உத்தரவை, வரும், 23ம் தேதி வரை நீட்டித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கும்பாபிஷேகம் நின்று விட்டதே என, கும்பாபிஷேக குழுவினரும், கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதே என இன்னொரு பிரிவினரும், கேள்வி எழுப்பி வருவதால், இந்த விவகாரத்தில், தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல், மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. இந்நிலையில், கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்த, கோவிலை சொந்தம் கொண்டாடும் சமூகத்தார் சார்பில், நேற்று, சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வரும், 23ல் விசாரணைக்கு வருகிறது.வழக்கு தொடர்ந்த வக்கீல் ராஜமாணிக்கம் கூறியதாவது:கும்பாபிஷேக குழுவினர், கோவிலை இடித்து கட்டும்போதும், அதற்கு முன்பும், ஆட்சேபம் தெரிவிக்காத தனிநபர்களும், மாவட்ட நிர்வாகமும், கோவிலை கட்டி முடித்து, கும்பாபிஷேகம் செய்யும் போது மட்டும், ஆட்சேபம் தெரிவிப்பது, எந்த விதத்திலும் நியாயமில்லை.இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம், ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், தனிநபர்களும் தலையிடவும், தடுக்கவும் சட்டத்தில் இடமில்லை. எனவே, இக்கோவிலில், அரசு மற்றும் தனிநபர்கள் தலையிட, நிரந்தர தடை விதிக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு, வரும், 23ல், விசாரணைக்கு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !