ராஜகாளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்
உடுமலை : உடுமலை, தாராபுரம் ரோடு, சிவசக்தி காலனியில் அமைந்துள்ளது ராஜகாளியம்மன் கோவில். கோவில் ஆறாமாண்டு உற்சவ திருவிழா, கடந்த பிப்., 24ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தினமும் காலை, மதியம், இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. மார்ச், 3ம் தேதி திருவிழா கம்பம் நடுதலும், 8ம் தேதி இரவு, முனி விரட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு, திருமூர்த்திமலையில் இருந்தும், மாலை, 6:00 மணிக்கு உடுமலை மாரியம்மன் கோவிலில் இருந்தும் தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இரவு, 10:00 மணிக்கு, கும்பம் தாளித்தல் நிகழ்ச்சி நடந்தது; முக்கிய வீதிகள் வழியாக ராஜ காளியம்மன் கோவிலை வந்தடைந்தது. நேற்றுமுன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன், ராஜகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.