மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள குப்பைத்தொட்டிகள்!
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள, சுற்றுலாத் துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 2014-15 ஆம் ஆண்டிற்கான மேம்பாட்டு திட்டத்தில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், நாகப்பட்டணத்தில், கீழ்பெரும்பள்ளம், கூத்தன்குளம், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம், சிக்கல் சிங்காரவேலனார் கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ வைகுண்டம், திருசெந்தூர் செந்தில்முருகன் கோவில், கோவை மாவட்டத்தில் மாசாணியம்மன் கோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உப்பிலியப்பன் கோவில் மற்றும் சுவாமிமலை ஆகிய ஆன்மிக தலங்களில் தூய்மையை பேணி காப்பதற்காக குப்பை சேகரிப்பு தொட்டிகள் வழங்கப்படுகின்றன.
நேற்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த விழாவில், கோவிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. பச்சை, சிவப்பு என இரு வண்ணங்களில் உள்ள இந்த குப்பைத்தொட்டிகள், கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இவ்விழாவில் கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் விஜயகுமார், பொள்ளாச்சி சப்-கலெக்டர் ரேஷ்மி சித்தார்த் ஜெகடே, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக், ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.