ராமன் எத்தனை ராமன்!
சரணாகதரட்சக ராமன்: தன்னை சரணடைந்த விபீஷணன், தன் எதிரி இராவணனின் தம்பியாக இருந்தாலும் தன்னை நம்பி வந்தடைந்ததால் அவனை அரவணைத்து ஆதரித்த ராமன்.
சேதுராமன்: வானர வீரர்கள் உதவியுடன் சேது சமுத்திரத்தைக் கடக்க பாலம் அமைத்து அதன்வழியாக லங்காபுரியை அடைந்த ராமன்.
கருணாகர ராமன்: நிராயுதபாணியாக நின்ற இராவணனை நல்ல வாய்ப்பாகக் கருதி உடனே கொல்லாமல், இன்று போய் நாளை வா என்று சொன்ன கருணை வள்ளலான ராமன்.
பவித்ர ராமன்: இந்திரனால் களங்கம் ஏற்பட்டு, அதன்காரணமாக சாபத்தினால் கல்லாக மாறிய அகலிகை ராமனின் திருப்பாதம் பட்டு பவித்ரமானாள். பாவப்பட்ட ரிஷிபத்தினியை புனிதவதியாக்கிய ராமன்.
உதாரண ராமன்: தந்தை தசரதன் சொல் காக்க, மனைவி சீதா மற்றும் தம்பி லட்சுமணனோடு கானகம் சென்று மானுடர்க்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்த ராமன்.
பிராதரு வத்ஸலராமன்: கானகம் தேடிவந்த தம்பி பரதனின் வேண்டுகோளையேற்று தன் பாதுகையை அளித்து, தான் வனவாசம் மேற்கொள்ள காரணமாக இருந்த சிற்றன்னையின் மகனாக இருந்தாலும் அந்த பரதனுக்கு பாசத்தை முழுமையாகக் காட்டிய ராமன்.
பராக்கிரம ராமன்: பஞ்சவடி-பர்ணசாலையில் தங்கியிருந்தபோது தம்மை எதிர்த்த கரன். தூஷணன், திரிசரன் ஆகிய அரக்கர்களையும் அவர்களது அசுரப்படைகளையும் மிகுந்த பராக்கிரமத்தோடு அடியோடு அழித்த ராமன்.
ஆனந்தராமன்: மதங்கமுனிவரின் ஆசிரமத்தில், தன் வருகைக்காக பன்னிரண்டு வருடங்கள் காத்திருந்து தவமிருந்த சபரிக்கு அனுக்கிரகம் புரிந்து, பெருவாழ்வையும் பேரானந்தத்தையும் சபரிக்கு அளித்த ராமன்.
மோட்சபலபிரத ராமன்: சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கேற்ப ராமபிரான் வாலியைக் கொல்ல, வாலியின் மார்பில் பாய்ந்த அம்பில் பொறித்துள்ள ராம எனும் மந்திரத்தை மனதால் நினைத்து, வாக்கால் உச்சரித்து, வாலிக்கு ராமநாமத்தாலேயே மோட்சம் அளித்த ராமன்.
தாரகநாம ராமன்: ஜடாயுவின் அண்ணனான சம்பாதி. இராவணனால் இழந்த சிறகுகளை ராமநாம மகிமையில் மீண்டும் பெற்றார். சீதை இருக்கும் இடத்தை வானர வீரர்களுக்குத் தெரிவித்தார். இவ்வாறு தன் நாமத்தை தாரகமந்திரமாக உச்சரித்த எல்லாரும் உய்யும் மார்க்கத்தை அருளிய ராமன்.
துக்கநாச ராமன்: அசோகவனத்தில் துக்கத்தில் துவண்டுகிடந்த சீதையிடம், ராமன் அளித்த கணையாழியை அனுமன் சமர்ப்பிக்க, அதைக்கண்ட சீதையின் துக்கமெல்லாம் தூசாகப் பறந்தது. இவ்வாறு அனைவருக்கும் துக்கம்போக்கும் ராமன்.