மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்!
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதுச்சேரி கடற்கரையையொட்டி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் விநாயகரை தரிசிப்பதற்காகவே, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் புதுச்சேரிக்கு வருகின்றனர். இக்கோவிலுக்கு, கடந்த 1999ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால், கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 5 கோடி செலவில், கடந்தாண்டு திருப்பணிகள் துவங்கியது. திட்ட அமலாக்க முகமையின் கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினர் மேற்பார்வையில், திருப்பணிகள் முடுக்கி விடப்பட்டது. கோவிலை விரிவாக்கம் செய்து, கோபுரங்கள், மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் உள் பிரகார மண்டபத்தின் மேல் பகுதியில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மண்டப சுவர்களின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அத்துடன் கோவிலையொட்டி குருக்கள் குடியிருப்பு, வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, யாகசாலை பூஜைகள், வரும் 30ம் தேதி துவங்குகிறது. கோவில் எதிரில் யாகசாலை மண்டபங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.