மேட்டுப்பாளையம் வடுக பைரவருக்கு லட்சார்ச்சனை!
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே வடுக பைரவருக்கு லட்சார்ச்சனையும், மகா மண்டல பூஜை நிறைவு விழாவும் நடந்தது. மேட்டுப்பாளையம், சிவன்புரம் அருகேவுள்ள ஆசிரியர்காலனி ரங்கராஜன் லே -அவுட்டில், ராஜஅஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது. இங்கு வடுக பைரவருக்கு, புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், 48 நாட்கள் மண்டல பூஜை செய்யப்பட்டது. இதன் நிறைவு நாளில், லட்சார்ச்சனையுடன் கூடிய, மகா மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதில் 10 அர்ச்சகர்கள் பங்கேற்று, லட்சார்ச்சனை செய்தனர்.விழாவில், கணபதி பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக, நட்சத்திர ஹோமம், வடுக பைரவருக்கு 108 முறை மூல மந்திரத்தால் ஹோமம் செய்யப்பட்டன. பின், மகா பூர்ணாஹூதியும், மகா அபிஷேகமும், கலசாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. கட்டளைதாரர்கள், விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.