உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகியகூத்தர் கோயிலில் ஆனித்திருவிழா 28ம்தேதி துவக்கம்

அழகியகூத்தர் கோயிலில் ஆனித்திருவிழா 28ம்தேதி துவக்கம்

திருநெல்வேலி : ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோயிலில் ஆனித்திருவிழா வரும் 28ம்தேதி துவங்குகிறது. ஜூலை 7ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. பஞ்சசபைகளில் தாமிரசபையான செப்பறை திருத்தலம் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இத்தலம் திருமால், அக்னிபகவான், அகத்தியர், மணப்படை வீடு மன்னருக்கு சிவபெருமான் நடனக்காட்சியளித்த சிறப்பு கொண்டது. உலகின் முதல் நடராஜமூர்த்தி இங்கு எழுந்தருளியதாக பக்தர்கள் கூறுகின்றனர். சிதம்பரம் கோயிலை போல இங்கு ஆண்டுதோறும் ஆனிஉத்திர திருமஞ்சன விழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா வரும் 28ம்தேதி காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், நடன தீபாராதனை, நெல்லையப்பர், காந்திமதிஅம்பாள் உட்பிரகார வீதியுலா நடக்கிறது. ஏழாம் திருநாளில் உருகுசட்டசேவை, சிவப்புசாத்தி தரிசனம், எட்டாம் திருநாளில் வெள்ளைசாத்தி, பச்சைசாத்தி தரிசனம் நடக்கிறது. ஒன்பதாம் திருநாள் ஜூலை 6ம்தேதி பகல் 11 மணிக்கு அழகியகூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். 11.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. கோயிலை சுற்றி தேர் வலம் வருகிறது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

ஆனித்திருமஞ்சனம்: ஆனிஉத்திர திருமஞ்சனம் ஜூலை 7ம்தேதி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு நடன தீபாராதனை, சுவாமி வீதியுலா, இரவு 7 மணிக்கு பிற்கால அபிஷேகங்கள், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !