திருத்தணி திரவுபதியம்மன் வீதியுலா!
திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்து வரும், தீமிதி திருவிழாவில், நேற்று, தருமர் பிறப்பை முன்னிட்டு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா கடந்த, 26ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. தினசரி காலை 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று, காலை 7:30 மணிக்கு, தருமர் பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 10:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் திருத்தணி நகரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பாண்டவர்கள் ஜனனம் வீதியுலா நடந்தது. இன்று மாலை, கோவில் வளாகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட அம்மன் தொட்டில் வைபவம் நடக்கிறது.