முத்திரை பதித்த 1983ம் ஆண்டின் கும்பாபிஷேகம்!
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில், ஆன்மிக அன்பர்கள் மற்றும் பக்தர்களின் முயற்சியால் படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்தது. 1966ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்திற்கு பிறகு அறங்காவல் குழு தலைவராக இருந்த ராமச்சந்திர ரெட்டியார், தன் நிலத்தில் கிடைத்த ஸ்படிக லிங்கத்தை, காஞ்சி சங்கராச்சாரியார் கூறியபடி, மணக்குள விநாயகர் கோவிலில் 1968ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஒப்படைத்தார். அன்று முதல் ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. சிதம்பரம், ராமேஸ்வரம், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய சிவாலயங்களில் நடந்துவரும் ஸ்படிக லிங்க பூஜை, இக்கோவிலில் நடப்பதால், கோவிலின் சிறப்பு மேலும் அதிகரித்து வந்தது. இந்நிலையில், அரவிந்தர் ஆசிரம அன்னை, இடம் கொடுத்ததால், கோவிலில் தெற்குபுறம் விஸ்தரிக்கப்பட்டு, பக்தர்கள் தாராளமாக விநாயகரை சுற்றி வலம்வர வசதி செய்யப்பட்டது. அப்போது, கோவில் விஸ்தரிப்பு செய்து, கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டு, முழுவதும் வண்ணம் பூசப்பட்டு, 1983ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அறநிலையத்துறை அமைச்சராக இருந்த கதிர்வேல் முயற்சியால், கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூன் 27 ம் தேதி பூஜைகள் துவங்கியது. 28 ம் தேதி காலை கோ பூஜை, கஜ பூஜை, தன பூஜையும், மாலை யாக சாலை பிரவேசமும் துவங்கியது. ஜூலை 1ம் தேதி காலை 9:00 மணிமுதல் 10:30மணிக்குள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அன்று மாலை சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். இந்த கும்பாபிஷேகம், புதுச்சேரியில் மறக்க முடியாத முக்கிய நிகழ்வாக அமைந்தது.