சண்முகநாதன் கோயிலை வனத்துறையுடன் சேர்க்க முயற்சி!
ராயப்பன்பட்டி : ராயப்பன்பட்டி சண்முகாநாதன் கோயில் அமைந்துள்ள பகுதிகளை மேகமலை வனஉயிரின சரணாலய பகுதிக்குள் இணைக்க சரணாலய அதிகாரிகள் முயற்சிப்பதாக கோயில் நிர்வாக கமிட்டி புகார் தெரிவித்துள்ளது. ராயப்பன்பட்டி சண்முகநாதன் அணைக்கு அருகில் அமைந்துள்ளது சண்முகநாதன் கோயில். இந்த கோயில் சங்க காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமையான இந்த கோயில் அமைந்துள்ள இடம் வழியாகத்தான் மதுரையை எரித்த கண்ணகி நடந்து சென்றார் என்பது ஐதீகம்.அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த கோயில் எரசை கிராம நிர்வாக அலுவலர் கட்டுப்பாட்டில் வருகிறது. கிராம கணக்குகளில் சண்முகநாதன் கோயில் என்று காட்டப்பட்டுள்ளது. கோயிலில் தைப்பூச விழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கோயிலை மேகமலை வனஉயிரின சரணாலயத்துடன் இணைக்க சரணாலய அதிகாரிகள் முயற்சிப்பதாக கோயில்கமிட்டியினர் தெரிவிக்கின்றனர். கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர் முத்தையா கூறுகையில்,""சண்முகநாதன் கோயிலை வனத்துறையுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோயிலை மட்டும் விட்டுவிட்டு சுற்றியுள்ள இடங்களை சரணாலயத்துடன் சேர்த்தால் எப்படி கோயிலிற்கு செல்ல முடியும். கோயில் 3 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. உத்தமபாளையம் தாசில்தாரிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.