உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்வாமி ஊர்வலத்தில் மங்கள இசை இந்தாண்டு நிறுத்தத்தால் அதிர்ச்சி

ஸ்வாமி ஊர்வலத்தில் மங்கள இசை இந்தாண்டு நிறுத்தத்தால் அதிர்ச்சி

ஈரோடு : ஸ்வாமி ஊர்வலத்தில் மங்கள இசை நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம், தேர் திருவிழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. பெரிய மாரியம்மன் மட்டுமின்றி, நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் என, மூன்று கோவில்களிலும், திருவிழா நடக்கிறது. இவை அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.ஆண்டுதோறும் தேர் திருவிழாவுக்கு முதல் நாள் வரை, நடு மாரியம்மன் உற்சவர் ஸ்வாமி, தினமும் காலை, மாலை வேளைகளில் வீதி உலா செல்வது வழக்கம். சுவாமிக்கு முன் தவில், நாதஸ்வரம், ஜால்ரா என வாத்திய கோஷ்டியினர் முன் செல்வர். இந்தாண்டும் அதுபோல், 25ம் தேதி முதல் நடு மாரியம்மன் கோவிலில் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் உற்சவர் வீதி உலா வருகிறார்.பொன் வீதி, அக்ரஹார வீதி வழியாக பெரியார் வீதி சென்று, அங்கிருந்து கோவிலை ஊர்வலம் அடைகிறது. நேற்று மாலை வரை, ஊர்வலம் நடந்தது. இன்று (1ம் தேதி) தேர் திருவிழா நடப்பதால், நேற்று (31ம் தேதி) ஊர்வலம் நிறைவு பெறும்.இந்தாண்டு தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட வாத்திய கோஷ்டியினர் ஊர்வலத்தில் தவிர்க்கப்பட்டது. மாறாக வாகனம் ஒன்றில், ஸ்பீக்கர் கட்டி "பென் டிரைவ் மூலம் பதிவு செய்த நாதஸ்வர சத்தம் ஒலிபரப்பபட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது: நாதஸ்வரம், தவிலுடன் கூடிய வாத்திய கோஷ்டியினர் சத்தம் கேட்டு, பக்தர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து, வீதியை சுத்தம் செய்து, சுவாமி தரிசனம் செய்வர்.முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு பதிவு செய்த ஒலி நாடாவை ஸ்பீக்கர் மூலம் ஒலிபரப்பி செல்கின்றனர்.கோவில் நிர்வாகத்திடம் இதுபற்றி கேட்டோம். செலவுக்கு தொகை இல்லாததால், இந்த ஏற்பாட்டை செய்ததாக கூறினர். வாத்திய கோஷ்டிகள் இன்றி, சுவாமி ஊர்வலம் செல்வது, பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, என்றார். கோவில் செயல் அலுவலர் ராஜா, ""என் கவனத்துக்கு வரவில்லை. வழக்கமான முறையை, மாற்றி இருக்க வாய்ப்பில்லை. எனினும், இதுபற்றி விசாரிக்கிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !