அறுபத்து மூவர் விழா மயிலையில் கோலாகலம்!
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அறுபத்து மூவர் விழா, பெரும் கோலாகலத்துடன் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நாயன்மார்களை தரிசித்தனர்.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று காலை, குளக்கரைக்கு திருஞானசம்பந்தர், சிவநேச செட்டியார், பூம்பாவை ஆகியோர் எழுந்தருளினார்.
மேற்கு குளக்கரையில் உள்ள மண்டபத்தில், திருஞான சம்பந்தருக்கு அபிஷேகம் நடந்தது. அதையடுத்து, பூம்பாவையை உயிர்ப்பிக்கும் அற்புதம், நடந்தது. ஓதுவார், மட்டிட்ட புன்னையங் கானல் என்ற திருஞானசம்பந்தரின் பதிகத்தை பாட, பூம்பாவைக்கு தீபாராதனை நடந்தது.
அதையடுத்து மூவரும், கோவிலுக்கு எழுந்தருளினர். பிற்பகல் 3:00 மணிக்கு, வெள்ளி விமானத்தில், கபாலீஸ்வரர் எழுந்தருள, அவருக்கு முன்பாக, அறுபத்து மூவர் எழுந்தருளினர். அறுபத்து மூவர் விழாவை காண, நகரின் பல பகுதிகளில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கானோர் மயிலாப்பூரில் குவிந்தனர்.
அதை முன்னிட்டு, பல இடங்களில் அன்னதானம், நீர்மோர், பானகம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.நேற்று மாலை, சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன.