திருத்தணி திரவுபதியம்மன் முருக்கம்பட்டில் வீதியுலா!
திருத்தணி,:திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று, உற்சவர் அம்மன், முருக்கம்பட்டு கிராமத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த 26ம் தேதி முதல் நடந்து வருகிறது. பிற்பகல் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு; இரவு, நாடகமும் நடந்து வருகின்றன. நேற்று, காலை 6:00 மணிக்கு, உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் டிராக்டரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடியும், உடலில் அலகு குத்தியும், டிராக்டரை, திருத்தணியில் இருந்து முருக்கம்பட்டு கிராமத்திற்கு இழுத்து சென்றனர்.
மாலை 5:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை, அம்மன் கிராம வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.