பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம்!
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தேர் ஆடிஅசைந்தபடி வீதி உலா வந்தது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மார்ச் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஒவ்வொரு நாளும் முருகன் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது.
தேரில் சோமஸ்கந்தர், பிரியாவிடை அம்மன், முருகன் ஆகியோரும் சிறிய சப்பரங்களில் முருகன், வள்ளி, தெய்வானையுடனும், மற்றொரு சப்பரத்தில் பரிவார மூர்த்திகளான, சண்டிகேஸ்வரர், விநாயகர் மற்றும் அறம் வளர்த்தநாயகியுடனும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சென்டமேளம் இசைக்க தேர் மேலரதவீதி, தெற்குரதவீதி வழியாக ஆடி அசைந்தபடி நிலையை வந்து அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ராஜா மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.