காளையார்கோவில் உருவாட்டி கோயில் தேரோட்டம்!
காளையார்கோவில்: உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. மார்ச் 25ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் விழா துவங்கியது. இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து தீச்சட்டி, காவடி எடுத்தும், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் தேரில் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு மக்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. இன்று அம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வந்து, கொடி இறக்கம் மற்றும் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள், உருவாட்டி கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.