உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை தேவாலயங்களில் இன்று புனித வெள்ளி வழிபாடு!!

கோவை தேவாலயங்களில் இன்று புனித வெள்ளி வழிபாடு!!

கோவை : புனித வியாழனை முன்னிட்டு தேவாலயங்களில், நேற்று பாதம் கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன.இன்று புனித வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், கிறிஸ்துவர்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர்.சாம்பல் புதன்கிழமை முதல் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வரையிலான தவக்காலத்தின் இறுதி வாரம், புனித வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.புனித வியாழன், கோவையிலுள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.கத்தோலிக்க தேவாலயங்களில் பாதிரியார்கள் தலைமையில் பாதம் கழுவும் சடங்கு நடந்தது.

கோவை கத்தோலிக்க மறைமாவட்ட பேராலயமான புனித மைக்கேல் தேவாலயத்தில் பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பணிவை வலியுறுத்தும் விதமாக சிறுவர்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.புலியகுளம் அந்தோணியார், சவுரிபாளையம் சவேரியார், கோவைபுதுார் குழந்தை இயேசு, காந்திபுரம் புனித பாத்திமா, காட்டூர் கிறிஸ்து அரசர் உள்ளிட்ட தேவாலயங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. திருப்பலியை தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனை நள்ளிரவு, 12:00 மணி வரை நடந்தது.

இதேபோல், சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் நேற்று காலை சிறப்பு வழிபாடு மற்றும் நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. புனித வெள்ளியை முன்னிட்டு, அனைத்து தேவாலயங்களிலும் சிலுவை பாதை, திருச்சிலுவை ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !