கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர விழா: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த 25ம் தேதி துவங்கியது. தினமும் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பல்லக்கில் உட்பிகார வலம் வரும் நிகழ்ச்சி, இரவு மயில், குதிரை, யானை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று காலை கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் விருத்தாசலம் சென்று, அங்கிருந்து பால்குடம், காவடி ஊர்வலத்துடன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை மணவாளநல்லூர் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி, வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. எஸ்.பி., ராதிகா மற்றும் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் 1:30 மணிக்கு மேல் மணிமுக்தாற்றிலிருந்து பால்குடம், காவடி சுமந்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கேமராவில் கண்காணிப்பு: கொளஞ்சியப்பர் கோவிலில், சுவாமி சன்னதி, உட்பிரகாரம், வெளி பிரகாரம், கோபுர வாசல்கள் உட்பட 13 இடங்களில் கேமரா பொறுத்தி கண்காணிக்கப்பட்டது. சேலம் மார்க்கமாக வந்து செல்லும் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, மணலூர் ரயில்வே மேம்பாலம் பகுதி ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல், விருத்தகிரிக்குப்பம் முருகர் சுவாமி கோவில், குப்பநத்தம் சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர்.