திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழா: முருகபெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி
தூத்துக்குடி: திருச்செந்தூரில் பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண நிழக்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4,30 க்கு விஸ்வரூப தீபாரதணையை, தொடர்ந்து மற்ற கால வேளை பூஜைகள் நடந்தது. காலை 5 மணிக்கு வள்ளியம்மன் சிவன்கோயிலில், எழுந்தருளிய தபசுக்காட்சி நடந்தது. பின் 12 மணிக்கு உச்சிகால தீபாரதணை நடந்தது. குமரவிடங்க பெருமான் மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, சிவன் கோயிலில் உள்ள வள்ளியம்மனுக்கு, கீழரத வீதி சந்திப்பில் காட்சியளித்தார். பின் சுவாமிகளுக்கு பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.அதன் பின்பு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின் அம்பாளை குமரவிடங்க பெருமான் மூன்று முறை வலம் வந்து, உள், வெளி மாட வீதிகள் வழியாக கோயில் வந்து சேர்ந்தார். அங்கு இரவு 10 மணிக்கு 108 லிங்கங்கள் முன்பாக சுவாமிக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் 11, 21,51 ரூபாய்களை மொய்பணமாக செலுத்தினர். பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்றனர்.