கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் கிரிவல பாதை அமைக்க நடவடிக்கை
தேனி : வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் கிரிவல பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்து விட்டதால், மீண்டும் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. முன்னதாக கோயிலுக்குள் உள்ள விநாயகர், முருகன் சன்னதிகளுக்கு விமானம் கட்டுதல், மரத்தடியில் உள்ள சிலைகளுக்கு பீடம் அமைத்தல், பிரதோஷ பூஜையின் போது பக்தர்களின் நெரிசலை தவிர்க்கும் வகையில் சிவன், நந்தியுடன் கூடிய பிரதோஷ மண்டபம் கட்டுதல் ஆகிய பணிகளை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பெயர்ந்து கிடக்கும் ஆற்றுப்படித்துறையினை சீரமைத்தல், கோயிலை பக்தர்கள் சுற்றி கிரிவலம் வருவதற்கு கிரிவல பாதை அமைத்தல் ஆகிய பணிகளும் செய்யப்பட உள்ளன. இதற்காக கோயிலை ஒட்டி உள்ள ஆற்றங்கரையில் தனி பில்லர்கள் அமைக்கப்பட உள்ளன. கோயில் வெளிப்பகுதியில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளுடன் கூடிய குளியல்அறை, உடை மாற்றும் அறைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.