உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஸ்டர் திருநாள் கோலாகலம் சர்ச்களில் சிறப்பு ஆராதனை

ஈஸ்டர் திருநாள் கோலாகலம் சர்ச்களில் சிறப்பு ஆராதனை

குறிச்சி : கோவையில், ஈஸ்டர் திருநாள் முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில், சிறப்பு ஆராதனை நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இதை, ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.பெரியகடை வீதி துாய மைக்கேல் தேவாலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு துவங்கிய பொது மற்றும் சிறப்பு திருப்பலி ஆராதனையை, கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார். போத்தனுார் கடை வீதி புனித சூசையப்பர் தேவாலயத்தில், பங்குத்தந்தை புஷ்பநாதன் ஆராதனையை நடத்தினார்.

மேட்டூரை அடுத்துள்ள கார்மேல், சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு மேம்பாலம் அருகேயுள்ள துாய தமத்திரித்துவ தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடந்தன. வெள்ளலுார் ரோடு சி.எஸ்.ஐ., யூனியன் சர்ச்சில், அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. சபை ஆயர் சாமுவேல் ஜான்சன், உயிர்த்தெழுந்த திருநாளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். திருவிருந்து ஆராதனையை, ஆயர் ஜார்ஜ் உடனிருந்து நடத்தினார். காலை, 9:00 மணிக்கு நடந்த ஆராதனையில், திருமுழுக்கு வழங்கப்பட்டது. சிட்கோ மிஸ்பா ஜெப மையத்தில் அதிகாலை, 4:30 மணிக்கு நடந்த ஆராதனையை ஆயர் பிரான்சிஸ்செல்வன் நடத்தினார். திருவிருந்து வழங்கப்பட்டது. அபிராமி நகரிலுள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து அரசர், காந்தி நகரிலுள்ள தமிழ் மெத்தடிஸ்ட், மதுக்கரை மற்றும் மலுமிச்சம்பட்டியிலுள்ள சி.எஸ்.ஐ., தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடந்தது.மாநகரிலுள்ள சி.எஸ்.ஐ., இமானு வேல், பாத்திமா, உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும், சிறப்பு ஆராதனை நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில், கோவையில் நேற்று நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் நுாறு பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அமைப்பின் மாநில தலைவர் ஸ்டீபன் ராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !