சீதா – ராமர் திருக்கல்யாணம்!
திருத்தணி: ராம நவமியை முன்னிட்டு, ராமர் கோவிலில் நேற்று, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் மோட்டுர் கிராமத்தில் உள்ளது சீதா ராமர் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் ராம நவமி விழா, ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், கடந்த 28ம் தேதி, ராம நவமியை முன்னிட்டு, இக்கோவிலில், சிறப்பு பூ ஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய சிலைகள் வைத்து கொலு அமைக்கப் பட்டது. தொடர்ந்து, ஒன்பது நாட்களும் இந்த கொலுவுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். நிறைவு நாளான நேற்று, காலை 8:00 மணிக்கு, ராமர் – சீதா திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு, நாடகம் நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியை ஒட்டி, பக்தர்களுக்கு, கோவில் வளாகத்தில், திருமண விருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கிராமவாசிகள் செய்திருந்தனர்.