கொண்டத்துக்காளியம்மன் குண்டம் திருவிழா!
அனுப்பர்பாளையம் : கொண்டத்துக்காளியம்மன் குண்டம் திருவிழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டத்தில், புகழ் பெற்ற பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, குண்டம் தேர்த்திருவிழா, கடந்த 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை உத்தமலிங்கேஸ்வரர் கோவில் வீதியில், பொங்கல் வைக்கப்பட்டு, படைக்கலம் கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கன்னிமார் முனீஸ்வரன் கோவிலில், அம்மை அழைக்கப்பட்டு, கொண்டத்துக் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூசாரிகள் குண்டம் இறங்கி துவக்கி வைத்தனர்.அதன்பின், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என விரதமேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், மஞ்சள் நிற உடையணிந்து, மஞ்சள் நீர் கிணற்றில் குளித்து, பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், குண்டம் மூடப்பட்டு, அம்மனுக்கு அக்னி அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், சிம்ம வாகனத்தில், தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3:30 மணிக்கு, தேரோட்டம் நடைபெற்றது.குண்டம் திருவிழா, திருப்பூர், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை ஒட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில், பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. அவிநாசி டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.