உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி முருகன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வடபழனி முருகன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வடபழனி: தமிழ் புத்தாண்டை ஒட்டி, வடபழனி முருகன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5:00 மணி முதல், 6:00 மணி வரை, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 6:00 மணி முதல், 12:00 மணி வரை, தங்க கவச அலங்காரமும், பிற்பகல் 1:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, ராஜ அலங்காரமும் நடைபெற்றன. பின், மாலை 4:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, புஷ்ப அங்கி அலங்காரம் நடந்தது.இதையொட்டி, அதிகாலை முதலே, வடபழனி முருகன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வர ஆரம்பித்தனர். நேற்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், முருகனை வழிபட்டனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், ஏராளமான பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உற்சவ அம்மன் ஆபரணங்களாலும், பலவகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார். மூலவர் ஆதிபுரீஸ்வரர், உற்சவர் தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் சிறப்பு அன்னதானமும், மாலை இசைநிகழ்ச்சியும் நடந்தன. தண்டையார்பேட்டை முருகன் கோவிலில், 20ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது. நேதாஜி நகர், 5வது தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பால்குடங்களை ஊர்வலமாக ஏந்திச் சென்றனர். பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில், சென்னமல்லீஸ்வரர் கோவில், மல்லீகேஸ்வரர் கோவில் மற்றும் கச்சாலீஸ்வரர் கோவில்களில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !