ஏரியில் புதைந்த சிவலிங்கம் இன்று தோண்டி எடுப்பு
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம் ஏரியில் புதைந்துள்ள, 8 அடி உயர சிவலிங்கம், இன்று காலை தோண்டி எடுக்கப்படுகிறது. ஆதம்பாக்கம் ஏரியில் பழமையான சிவலிங்கம் ஒன்று உள்ளது. 8 அடி உயரம் கொண்ட அந்த லிங்கத்தை, 50 ஆண்டுகளுக்கு முன் வசித்தோர் பார்த்துள்ளனர். பின், காலப்போக்கில் அந்த சிவலிங்கம் ஏரியில் புதைந்து போனது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மவுன்ட்- வேளச்சேரி உள்வட்ட சாலையில் மேம்பால பணிக்காக, ஆதம்பாக்கம் ஏரியில் துாண் அமைக்கும்போது, அந்த சிவலிங்கம் பூமிக்கு வெளியே சிறிது தெரியவந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஆன்மிக அமைப்பினர், அந்த நிலையிலேயே அதற்கு பூஜை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்மிக அமைப்பினர், இன்று காலை சிவலிங்கத்தை தோண்டி எடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்காக நேற்று மாலை யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடத்தப்பட்டன. இன்று காலை 9:00 முதல் 10:30 மணிக்குள், சிவலிங்கம் வெளியே எடுக்கப்படுகிறது.