உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்மத ஆண்டு பிறப்பு ஈரோடு கோவிலில் குவிந்த பக்தர்கள்!

மன்மத ஆண்டு பிறப்பு ஈரோடு கோவிலில் குவிந்த பக்தர்கள்!

ஈரோடு: மன்மத தமிழ் ஆண்டு பிறப்பு தினமான நேற்று, நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஈரோட்டை அடுத்த, காங்கேயம் பாளையத்தில், காவிரி ஆற்றின் நடுவே, அன்னபூரணியம்மாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு, அம்பாளுக்கு இரு தினங்கள் லட்சார்ச்னையும், சங்காபிஷேகமும் நடந்தது.நேற்று அதிகாலை அகஸ்தீஸ்வரருக்கு, 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. வாதாபி, வில்லவன் ஆகிய இரு அரக்கர்களை அழித்ததால், அகத்தியருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. காவிரி ஆற்றின் நடுவே, மணலில் லிங்கம் ஏற்படுத்தி, ருத்ராட்சத்தை மாலையாக அணிவித்து, பூஜை செய்து, கம்பை நைவேத்தியமாக படைத்து, தோஷம் நீங்க செய்தார்.காவிரி ஆற்றின் நடுவே இருப்பதால், நல்ல நாயகி உடனமர் நட்டாற்றீஸ்வரர், அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால், அன்னபூரணி அம்மாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.இங்கு, இயற்கையாக லிங்கம் தோன்றியதாக கருதப்படுகிறது. தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு, நேற்று நான்கு அலங்காரம் செய்யப்பட்டது. காலையில், வைரத்தால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, பரிசல்கள் மூலம் பக்தர்கள் வந்தனர். இதே போல், ஈரோடு மாவட்ட பக்தர்கள், ஆற்றின் நடு வே நடந்தவாறு, கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கம்பங்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜை நடக்கிறது. காலை ஆறு முதல் மாலை ஆறு மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும். நீரோட்டம் உள்ள நாட்களில், பக்தர்கள் பரிசல் மூலம் வந்து செல்கின்றனர்.சித்திரை வருட பிறப்பன்று, சுவாமி தரிசனம் செய்தால் பாவ, தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக, ஆற்றின் நடுவே இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மதியம், 12 மணிக்கு பின் பக்தர்கள் அதிகளவில் வந்ததால், வாகன போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டது. குறைந்த அளவிலான பரிசல்களே இயக்கப்பட்டதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விழாவை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதே போல், ஈரோடு மாரியம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில் உள்ளிட்டவற்றில், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !