செண்பகவல்லியம்மன் கோயில் தெப்பத்திருவிழா!
தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில், தெப்பத்திருவிழா நேற்று இரவு நடந்தது. கோவில்பட்டியில் செண்பகவல்லியம்மன், பூவனநாத சுவாமிகள் கோயில் பங்குனி திருவிழா, ஏப்.,5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி , வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தது. 11ம் நாளான நேற்று காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரங்களுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின் பிரதான சாலையில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளும் எழுந்தருளி, 9 முறை தெப்பத்தை வலம் வந்தனர். இதனை பக்தர்கள் கண்டு களித்தனர். விழா ஏற்பாடுகளை இணை கமிஷனர் அன்புமணி, நிர்வாக அதிகாரி பூவலிங்கம், தக்கார் அருணாச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.