குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் விஷு பண்டிகை கோலாகலம்!
பாலக்காடு: விஷு பண்டிகை, கேரளாவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி, மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், விஷு பண்டிகை பல்வேறு சிறப்புகளுடன் கொண்டாடப்பட்டது. மூலவருக்கு காணிக்கையாக கொண்டு வந்த தானியங்கள், கோவில் வளாகத்தில் குவிந்திருந்தன. அதிகாலையில் மூலவரை தரிசித்து, மேல்சாந்தியிடமிருந்து கைநீட்டம் வாங்க, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விஷுக்கணியின் முந்தைய நாளான நேற்று முன்தினம் இரவு, கணி காண்பதற்கு தேவையான பொருட்களை, ஸ்ரீகோவிலினுள் அமைத்து வைத்து நடையை சாத்தினார் கீழ்சாந்தி. அதிகாலை, 2:30 மணியளவில், மேல்சாந்தியும் கீழ்சாந்தியும் ஸ்ரீகோவிலுக்குள் கணி குத்துவிளக்கை ஏற்றி மூலவரை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு மூலவரை தரிசிக்க, முகமண்டபத்தில் பிரத்யேகமாக தயார் செய்த தங்க மண்டபத்தில், மூலவரின் உருவச்சிலையை எழுந்தருளி வைத்தனர். நெற்றிப்பட்டம், ஆலவட்டம், வெஞ்சாமரம் ஆகியவற்றால் தங்க சிம்மாசனத்தை சிறப்பாக அலங்கரித்து வைத்திருந்தனர். தொடர்ந்து அன்றாட பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் மூன்று வேளையும் யானைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.