சிங்கவரத்தில் தேர் வெள்ளோட்டம் இந்து அறநிலையத் துறை ஆலோசனை
செஞ்சி: சிங்கவரத்தில் தேர் வெள்ளோட்டம் விடுவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. செஞ்சி தாலுகா சிங்கவரம் மலை மீதுள்ள பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர், 80 ஆண்டுகளுக்கு முன்பு சேதமாகியது. இந்து சமய அறநிலையத்துறை மூலம் 11.50 லட்சம் ரூபாயும், கிராம நிதியாக 8 லட்சம் மற்றும் பொதுமக்களின் நன்கொடையை கொண்டு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 அடி உயரத்தில் தேர் கட்டி உள்ளனர். இத்தேர் வெள்ளோட்டம் மே 22ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக தெருக்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சாலைகளை விரிவாக்கவும், மின் கம்பங்களை இடம் மாற்றவும் செய்வதற்கான ஆலோசனை கூட்டம், சிங்கவரத்தில் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்பத் குமார், பி.டி.ஓ., ரோஷன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன், ஆர்.ஐ., குபேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தாஜி, மேலாளர் மணி, திருப்பணிக்குழு குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். தெருக்களை ஆய்வு செய்த இக்குழுவினர், தெருக்களை அகலப்படுத்தவும், மின் கம்பங்களை இடமாற்றம் செய்வதற்கும் சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பது என்றும், இதன் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்தனர்.