கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவ விழா வரும் 24ல் துவக்கம்!
பொள்ளாச்சி :பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழா, வரும் 24ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, வரும் 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விச்வக்சேன ஆராதனம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, கருட பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, 25ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும்; மாலை, 5:00 மணிக்கு புண்யாக வாஜனம், ரட்சாபந்தனம், யாக சாலை துவக்கம், மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்துடன் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, 26ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில், பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து, மே 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருபல்லக்கில் மோகினி அலங்காரத்தில் திருவீதி உலாவும்; மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும்; மாலை, 6:00 மணிக்கு குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து 3ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் தேரில் ஏளப்பண்ணுதல், வடம்பிடித்தல், மாலை, 6:00 மணிக்கு திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும்; 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு தீர்த்த வாரி நிகழ்ச்சியும், மாலை, 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், கண்டருலுதல், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.