திருப்புத்தூரில் ஜெயந்தன் பூஜை: பெண்கள் மாவிளக்கேற்றி வழிபாடு
ADDED :3824 days ago
திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜையை முன்னிட்டு யோகபைரவர் சன்னதியில் பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இந்திரனின் மகன் ஜெயந்தன் பாபவிமோசனம் பெற, யோகபைரவர் சன்னதியில் தவமிருந்து, சித்திரை முதல் வெள்ளியன்று பாவ விமோசனம் அடைந்ததாக ஐதீகம் உள்ளது.கோயிலில் யோகபைரவர் சன்னதி முன்பாக ஜெயந்தன் மகாராஜா சிலை உள்ளது. சித்திரை முதல் வெள்ளியன்று ஜெயந்தன், பைரவருக்கு செய்த பூஜையை நினைவுகூர்ந்து, பக்தர்கள் யோகபைரவரை வழிபடுகின்றனர். காலை 8.30 மணிக்கு பைரவர் சன்னதியில் யாகசாலை பூஜை,பகல் 12 மணிக்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. விபூதி அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து தங்கக் கவசத்தில் பைரவர் காட்சியளித்தார்.பெண்கள் பைரவர் சன்னதியில்மாவிளக்கேற்றி வழிபட்டனர்.