உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை கோயிலில் பழமைவாய்ந்த சுவாமி சிலைகள் கொள்ளை!

திருவாடானை கோயிலில் பழமைவாய்ந்த சுவாமி சிலைகள் கொள்ளை!

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 100 ஆண்டு பழமைவாய்ந்த 7 வெண்கல சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்று விட்டனர். ராமநாதபுரம், திருவாடானையில் பிரசித்தி பெற்றது ஆதிரெத்தினேஸ்வரர் கோயில். நேற்று அதிகாலை 5 மணிக்கு,வழக்கம் போல் கோயிலின் முன்புற கதவை திறந்த காவலர் தர்மலிங்கம், உட்பிரகார கதவை திறக்க முயன்றார். பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி செயல் அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக, கோயிலைச் சுற்றி மூங்கில் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் மூங்கில் சாரத்தில் ஏறி, கோயிலுக்குள் இறங்கி கதவின் பூட்டை உடைத்து வெண்கலத்தால் செய்யப்பட்ட விநாயகர், முருகன், சந்திரசேகர், பவானிஅம்மன், அம்மன் ஆகிய சிலைகளையும், வேல், பீடம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்பறியும் மோப்பநாய் சூச்சனி கிராமம் வழியாக ஓடி, வயல் பகுதியில் நின்றது. அங்கு கொள்ளை போன வேல் மட்டும் கிடந்தது. அதை போலீசார் கைபற்றினர்.

இதுகுறித்து ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன் கூறியதாவது: கொள்ளை போன சிலைகள் 100 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கல சிலைகள் என தொல்பொருள் ஆய்வு துறையினர் சான்றிதழ் வழங்கியுள்ளனர். கோயிலுக்கு இரவு காவலர் இல்லை. கண்காணிப்பு கேமரா வைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போன சோமஸ்கந்தர் என்ற சிறிய சிலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை,” என்றார். திருவாடானை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். தகவலறிந்த தொகுதி எம்.ஏல்.ஏ., சுப.தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, ஒன்றியத்தலைவர் முனியம்மாள் ஆகியோரும் வந்து கோயிலை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !