ஏகாம்பரநாதர் பிரசாத கடை ரூ.5.65 லட்சத்திற்கு ஏலம்!
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேங்காய், பழம், அர்ச்சனை பொருள் விற்பனை கடையை, இந்தாண்டும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. காஞ்சிபுரம் மேற்குராஜவீதியில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிருத்திகை மற்றும் செவ்வாய்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இக்கோவிலில் ஜூலை 1ம் தேதி முதல், ஓராண்டு காலத்திற்கு பிரசாத கடை நடத்தும் உரிமம், வாகனங்களை பாதுகாத்து கொடுக்கும் உரிமம், முடிகாணிக்கை சேகரித்துகொள்ளும் உரிமம், சிதறு தேங்காய் சேகரித்து கொள்ளும் உரிமம், தேவஸ்தான பூஜை முறை (கைங்கர்யம்) செய்யும் உரிமம், தேங்காய், பழம், அர்ச்சனை பொருள் விற்பனை செய்யும் உரிமம் ஆகியவற்றுக்கான டெண்டர் விடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை அறநிலையத்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில், கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தி முன்னிலையில் நேர்முக பொது ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய், பழம், அர்ச்சனை பொருள் விற்பனை உரிமத்திற்கு யாரும் ஏலம் கோரவில்லை. சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த, கபாலி என்பவர் தேங்காய், பழம், அர்ச்சனை பொருள் விற்பனை உரிமம் கோரி மனு போட்டிருந்தார். அவரும் டெண்டர் எடுத்து, கடையை நடத்த இயலாத சூழ்நிலையால் டெண்டர் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுதிக்கொடுத்தார். இதனால், இந்தாண்டும் தேங்காய், பழம், அர்ச்சனைப் பொருட்கள் விற்பதற்கான உரிமம் வழங்கமுடியவில்லை. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பிரசாத கடை நடத்துவதற்கான உரிமத்திற்கு டெண்டர் விடப்பட்டது. உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடந்த மறைமுக ஏலத்தில், யாரும் டெண்டர் மனு போடவில்லை. நேர்முக ஏலத்தில் ஐந்து பேர் கலந்து கொண்டனர். இதில், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவர் பிரசாத கடை நடத்த 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.